உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பழைய ஐந்து பைசாவிற்கு அரை பிளேட் பிரியாணி அலைமோதிய கூட்டம்.
உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில், பழைய ஐந்து காசு கொண்டுவரும் முதல் 100 பேருக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த உணவகத்தில் கூட்டம் அலைமோதியது.
ஐந்து பைசா கொண்டுவந்து அரை பிளேட் பிரியாணியை வாங்குவதற்கு பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 12 மணிக்கு கடை திறந்தவுடன் நீண்ட வரிசையில் இருந்த பொதுமக்கள் தங்கள் வைத்திருந்த ஐந்து பைசா நாணயங்களை உணவகத்தில் வழங்கி அரை பிளேட் பிரியாணியை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் ஷேக் முஜிபுர் ரகுமான், “கலாச்சாரம் நாகரீகத்தை உணர்த்தும் நாணயங்களின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பை நாங்கள் அறிவித்தோம். இன்றைய தலைமுறை நாணயத்தின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்காகவும் கீழடியில் பழமையான தொல்லியல் ஆய்வுகள் கிடைத்தது போல் பழமை மாறாமல் பழைய நாணயங்களை சேகரிப்பதற்காகவும் நினைவு படுத்துவதற்காகவும் இந்த உணவுத் தினவிழாவில் இப்படி ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அடுத்த வருடம் ஆண்டவன் அருளால் 500பேருக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.