முதன்மை செய்தியாளர்: எம்.வீரமணிகண்டன்
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன் பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உளளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திண்டுக்கல், மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்குவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்நிலையில், வாடி வாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இந்த போட்டியில் சிறப்பாக சீறிவரும் காளைகள் மற்றும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவின் சார்பாக பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்ட மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருடைய காளை வெற்றி பெற்று வாடி வாசலில் இருந்து வெளியே சென்றது.
அப்போது மாட்டின் உரிமையாளர்கள் கயிறு வீசி மாட்டை பிடிக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து திண்டுக்கல் தோட்டனூத்து அருகே காளை பிடிக்கப்பட்ட நிலையில், காளைக்கு மூக்னாங்கயிறு கோர்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காளை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.