திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காசிபாளையம் செல்லும் அரசு பேருந்து ஒன்று, வழக்கம்போல பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த பேருந்தைப் பெருமாள் (55) என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். கிருஷ்ணசாமி (40) என்பவர் நடத்துநராக இருந்துள்ளார்.
இதில் வேடசந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். குடகனாறு பாலத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, படியில் நின்றபடி பயணம் செய்த ஒரு பள்ளி மாணவனை, நடத்துநர் கிருஷ்ணசாமி உள்ளே வருமாறு கூறி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், நடத்துநர் கிருஷ்ணசாமியைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, "இரு எங்க அப்பாவ கூட்டிட்டு வரேன்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மாணவன் தாக்கியதில் நடத்துநர் காயமடைந்த கிருஷ்ணசாமி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேருந்தில் நடத்துநர் இல்லாததால், ஓட்டுநர் பெருமாள் குடகனாற்று பாலத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மது போதையில் வந்த மாணவனின் தந்தை “என் மகனை தாக்கிவிட்டு அந்த நடத்துநர் தப்பி ஓடிவிட்டாரா? இப்போது அந்த நடத்துநரை வரச்சொல்” என்று கூறி பேருந்தின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் காவல்துறையினரையும் ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த போலீசார், அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் அரசு பேருந்து நடத்துநரை தாக்கியது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.