திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நேற்றிரவு எஸ்.கே.நகரை சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்கள், கருப்பசாமி மீது இடிப்பது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பாத்து போகுமாறு கருப்பசாமி கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கருப்பசாமி அய்யலூரில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்றிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், கருப்பசாமியை இரும்பு கரண்டியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து கருப்பசாமி, அவர்களிடமிருந்து தப்பித்துயோடியுள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கருப்பசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களை பிடிக்க முயற்சித்த போது அனைவரும் அங்கிருந்து தப்பியோடி நிலையில், ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாயராஜன் என்பதும், வடமதுரை, மோர்பட்டி, அய்யலூர் பகுதிகளைச் சேர்ந்த தனது நண்பர்களான ரஞ்சித், சரவணன், சபரி, முத்துமணி ஆகியோருடன் கஞ்சா அடித்து விட்டு சென்றபோது, போதையில் கருப்பசாமியை தாக்கியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் மாயராஜனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த காட்சிகளை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.