“கொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்” தொற்றிலிருந்து மீண்ட திண்டுக்கல் டிஐஜி-ன் அனுபவம்!

“கொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்” தொற்றிலிருந்து மீண்ட திண்டுக்கல் டிஐஜி-ன் அனுபவம்!
“கொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்” தொற்றிலிருந்து மீண்ட திண்டுக்கல் டிஐஜி-ன் அனுபவம்!
Published on

கொரோனா அனுபவங்களை பகிர்ந்துகொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் துப்புறவு பணியாளர்கள் காவல்துறையினர் என பலரும் பாதுகாப்போடு பணியாற்றினாலும் கொரோனா அவர்களையும் விட்டுவைக்கவில்லை. முன்கள பணியாளர்கள் பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இறந்துபோயுள்ளனர். பலர் நோய்தொற்றில் இருந்து குணமாகி மீண்டும் தங்கள் பணியை தொடர்கின்றனர். அந்தவகையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் பணியை தொடர்ந்து வரும் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி இ.கா.ப அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.


திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனா நோய் வேகமாக பரவிவருவது மிகுந்த கவலையளிக்கிறது. நான் ஏற்கெனவே சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக பணியாற்றியபோது கோயம்மேடு மார்க்கெட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எனக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டது. தேவையான பாதுகாப்பு உபகரணங்களோடு நாங்கள் பணியாற்றினாலும்கூட சமூக இடைவெளியை கடைபிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த காரணத்தினால். எங்களில் பலருக்கு கொரோனா நோய் தொற்று வந்துவிட்டது.

நோய்தொற்று வந்தபின்பு இரவு மற்றும் மதியவேளையில் காய்ச்சல் வந்தது. அதன்பின்பு அளவிற்கு அதிகமான உடல்வலி ஏற்பட்டது. இது கொரோனா அறிகுறிபோல் இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா இருப்பதாக ரிசல்ட் வந்தது. உடனே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மூன்றுநாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று மீண்டுவந்தேன். அப்படி சிகிச்சையில் இருந்த போது மருத்துவர்களின் ஆலோசனையின்படி அலோபதி ஹோமியோபதி மற்றும் சித்தா மருந்துகளை எடுத்துக் கொண்டேன். அதன்பிறகு வீட்டிற்கு வந்து 18 நாட்கள் என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன்.


என்னுடைய அனுபவங்களின் அடிப்படையில் கொரோனா நோய் மற்றவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்கின்ற அக்கறையில் சொல்கிறேன். கொரோனா நோய் நம்மை என்ன செய்துவிடும் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். இறப்புவிகிதம் குறைவாக இருந்தாலும் கொரோனா நோய் ஏற்பட்டபின்பு நாம் அனுபவிக்கின்ற மனஉளைச்சல்கள் அதிகமாக இருக்கும். நம் அருகில் யாரும் வரமாட்டார்கள் நம்மை தொடாமல் விலகிச் செல்வார்கள் வித்தியாசமாகவும் பார்ப்பார்கள். அதுவே நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும்.

மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய மக்கள் எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையின் சார்பாக நகர்பகுதிகளில் விலகி இருங்கள் சமூக இடைவெளியை கடைபிடிங்கள் தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுரை வழங்கினாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. கொரோனா நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பெரும்பாலும் வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள். அதேபோல நமது வீட்டிற்கு யாராவது வருவதாக சொன்னாலும் இப்போது வரவேண்டாம் என்று அன்பாக மறுத்துவிடுங்கள்.


அத்தியாவசிய தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம்தான் உயிர்கவசம் என்பதை உணர்ந்து முககவசம் அணிய மறக்காதீர். வீட்டிற்குத் தேவையான பொருட்களை கூட்டம் அதிகம் இல்லாத கடைகளுக்குச் சென்று வாங்குங்கள். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது ஒவ்வொரு முறையும் கைகளை சோப்புபோட்டு நன்றாக கழுவுங்கள் அப்படி சோப்பால் கைகளை கழுவும்போது கொரோனா கிருமிகள் சோப்பில் கறைந்து வெளியே சென்றுவிடும்.

கொரோனா நோய் நம்மை தாக்காமல் இருக்க தினந்தோறும் சுடுநீரில் உப்புபோட்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதேபோல குளிர்ந்தநீரை தவிர்த்து சூடான நீரையே பருகுங்கள். கொதிக்கும் நீரில் ஆவிபிடிங்கள். கொரோனா காலங்களில் சூடான உணவையே சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த முட்டை வைட்டமின் சி அதிகம் உள்ள சத்துமாத்திரைகள் பெரிய நெல்லிக்காய் ஜூஸ் ஆகியவைகளை எடுத்துக் கொள்ளலாம். யார்யாருக்கெல்லாம் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவர்களை கொரோனா அண்டாது.

மருத்துவரின் ஆலோசனைபடி ஆங்கில மருந்துகளோடு நோய் எதிர்ப்பு சக்திமிக்க ஆர்சனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி மாத்திரைகளை வாரம் 3முறை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அதேபோல கபசுர குடிநீர், மரமஞ்சள் குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவைகளை குடிக்கலாம்.


கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு மூச்சுப்பயிற்சி மிகமிக அவசியம். மூச்சுப்பயிற்சி செய்வதால் நுரையீரல் இயக்கம் அதிகரிக்கும் அதனால் நாம் கொரோனா நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எனவே தினமும் 20 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். இதைநான் எனது அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு சொல்கிறேன்”என்றார் அக்கறையுடன்.
பாதுகாப்போடு இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் யாரும் பயப்படாதீர்கள். கொரோனா நோயாளிகள் இதுசம்பந்தமான எதிர்மறையான செய்திகளை பார்க்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பகல்நேர தூக்கத்தை தவிர்த்துவிட்டு இரவுநேரம் மட்டுமே உறங்குங்கள்.
கொரோனா நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் காவல்துறை கண்ணும் கருத்துமாக இருக்கிறது. திண்டுக்கல் தேனி மாவட்ட மக்களுக்கு, கொரோனா சம்பந்தமாக காவல்துறையின் உதவி தேவையென்றால் அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளுங்கள். தேவையென்றால் என்னையும் தொடர்பு கொள்ளுங்கள் நான் உங்களுக்கு உதவிசெய்ய காத்திருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com