செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல், அழகுபட்டியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் - சூர்யா தம்பதியர். இவர்களுக்கு பாண்டீஸ்வரி (2) என்ற பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்துள்ளனர்.
அப்போது பெண் குழந்தையை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு பாலை கம்பத்தில் ஊற்றி வரச் சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த முருகாயி என்பவர் குழந்தையை தூக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், கோபால்பட்டிக்கு வந்த பேருந்தில் இருந்து ஒரு பெண்மணி கை குழந்தையுடன் இறங்கியுள்ளார். அப்போது குழந்தையின் வாயை பொத்தியபடியே தூக்கி வந்துள்ளார். அந்த பெண்மணியின் உடைகள் அனைத்தும் அழுக்கு படிந்த நிலையில் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரிடமிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, இந்த குழந்தை யாருடையது என கேட்டுள்ளனர்.
அப்போது அந்த பெண், “இந்த குழந்தை எனது பேத்தி” என முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாணார்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், குழந்தையை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே குழந்தையை காணவில்லை என தாய் மாரியம்மாள் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த காவலர்கள், “தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் குழந்தை ஒன்று சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த குழந்தை உங்களுடையதா என்று பாருங்கள்” என்று புகைப்படத்தை காட்டியுள்ளனர். அதை பார்த்த தாய் மாரியம்மாள், “இது என்னுடைய குழந்தைதான்” என்று கூறவே, காவலர்கள் அவரை சாணார்பட்டி மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது குழந்தையை அவருடன் சேர்த்து வைத்தனர். கடத்தப்பட்ட குழந்தையை தாயுடன் சேர்த்த சாணார்பட்டி மகளிர் காவலர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.