ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், டிடிவி.தினகரனின் ஆதரவாளார் வெற்றிவேல், கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சியை வெளியிட்டார். இதுதொடர்பாக, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வமும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தங்கள் வாதங்களை முன்வைக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.