களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருட்டு? - விவசாயி குற்றச்சாட்டு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருட்டு? - விவசாயி குற்றச்சாட்டு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருட்டு? - விவசாயி குற்றச்சாட்டு
Published on

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருடப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத் தீர்வுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி நயினார் குளம், பாளையங்கால்வாய் பகுதிகள் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து தங்கும் கங்கை கொண்டான் குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேலை மரங்களை அகற்ற விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்தார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 60% விவசாய நிலங்களின் பட்டா விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டிருப்பதாகவும் தாமிரபரணி ஆறு பாயும் இடங்கள் மற்றும் அதன் கால்வாய் பகுதிகளில் இனி தேவையில்லாமல் தடுப்பணைகள் அமைக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே  திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் ரூ.45 லஞ்சம் பெறுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பெருவுடையார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விவசாயி வாழ்வாதார பிரச்னையாக குளங்களை தூர்வார வேண்டும். நீர்பாசன கட்டமைப்பு உருவாக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் காட்டுப் பன்றிகள் விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. அதற்கு எந்த இழப்பீடும் அரசு தருவதில்லை. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க  கோரிக்கை வைத்தோம். வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வாரம் கூட வைரக்கற்கள் திருடப்படுவதாக புகார் அளித்திருந்தேன். ஆனால் என்மீது காவல்துறையினர் குற்றம் சுமத்தி புகாரை திசை திருப்புகின்றனர். விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே வசதி படைத்த சில ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் அணைக்கட்டுகள் கட்டப்படுகிறது. குறிப்பாக தாமிரபரணி நதிக்கு கீழ் கட்டப்பட்ட தடுப்பணை பெப்சி நிறுவனத்திற்காக போடப்பட்டது. எனவே விவசாயிகள் பயன்பெறாத இந்த தடுப்பணையை உடைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

-நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com