தருமபுரி மாணவி உயிரிழந்த வழக்கில் சாட்சியங்களிடம் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெற்றார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், சதீஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதீஷுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மதன்ராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரி லக்ஷ்மி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அத்துடன் தடயவியல் ஆய்வுக்காக அந்த இடத்திலிருந்து மண், கல், குச்சிகள் உள்ளிட்ட தடயங்களை எடுத்து சென்றனர். இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி 5 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றார். அத்துடன் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு சேர்க்கப்பட்ட குழந்தைகள் நல காப்பாக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலும் ஒருவரிடமும் நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெறவுள்ளார்.