தருமபுரியில் இருசக்கர வாகன பதிவு எண் மற்றும் முறையான ஆவணம் இல்லாமல் இயங்கிய 10 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி நகரப் பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் முறையான பதிவு எண்கள் இன்றி இயங்குவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில், தருமபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான குழுக்கள் ஆட்டோக்களை தணிக்கை செய்தனர்.
தருமபுரி பேருந்து நிலையம், இராஜ கோபால் கவுண்டர் பூங்கா, தருமபுரி ரயில் நிலையம், நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளி மாவட்ட பதிவு எண்கள் மற்றும் வாகன புதுப்பித்த சான்று, இன்சூரன்ஸ், வண்டி புத்தகம் இல்லாமல் இயங்கிய 8 ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகன பதிவு எண் பயன்படுத்தி ஓடிய 2 ஆட்டோக்கள் என மொத்தம் 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற வாகன சோதனைகள் தொடரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.