தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் முள்ளிங்கி வரத்து அதிகரித்து கிலோ ரூ.2-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், அன்னசாகரம், குண்டல்பட்டி, செம்மாண்டகுப்பம், சவுக்கு தோப்பு, நாய்க்கன்கொட்டாய், இண்டமங்கலம், முத்துக்கவுண்டன்கொட்டாய் பகுதிகளில் முள்ளங்கி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக முள்ளிங்கி விளைச்சல் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரை முள்ளங்கி கிலோ ரூ.12க்கு விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்தால், முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.5, 6 என விற்பனைமாகிறது. இதில் விவசாயிகளிடம் நேரடியாக சென்று வாங்கும் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.2-க்கு வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள், சென்னை கோயம்பேடு மற்றும் கேரளா மார்க்கெட்டிற்கு, தருமபுரி மாவட்டத்தின் முள்ளங்கியை விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்பொழுது முள்ளிங்கி விலை வீழ்ச்சியடைந்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அறுவடை செய்யும் கூலிக்குகூட வழங்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.