மொரப்பூர் அருகே பேருந்து வசதியில்லாததால், தினமும் 4 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள். பள்ளி நேரத்திற்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள மாரப்ப நாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தருமபுரி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கச் சென்று வருகின்றனர்.
அதேபோல் கிராமங்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால், இந்த கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதியில்லை. இந்த கிராமங்களின் வழியாக ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால், மதிய நேரத்தில் பேருந்து வருவதால், யாருக்கும் பயனில்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த 4 கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை நேரங்களில் பேருந்து வசதி இல்லாததால் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து நடந்து வருவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு நவலை, சின்ன கவுண்டம்பட்டி, பொம்பட்டி போளையம் பள்ளி, மாரப்பன் நாயக்கன்பட்டி மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் அரசு பேருந்து வசதியை செய்து தர வேண்டும் என பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் மாணவ மாணவிகள் செல்லும் சாலையில், உள்ள மின் கம்பங்களில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மாணவ, மாணவிகளின் வசதிக்காக விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார்.