“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி !

“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி !
“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி !
Published on

தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த ராஜூவ் - தெய்வானை தம்பதியினர். இவர்களுக்கு வினோத்குமார், அசோக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த ராஜூவ் படிப்படியாக வளர்ந்து தனியாக தொழில் செய்து வந்தார். தனது இரண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கடந்த 2008- ஆம் ஆண்டு சாலை விபத்தில் ராஜூவ் உயிரிழந்தார். இளைய மகன் அசோக்குமார் 12-ம் வகுப்பு கணித பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் அவர் தந்தை இறந்துவிட்டார். அந்த சோகத்திலும், கணித தேர்வில் அசோக் குமார் 200 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மனம் தளராத அவரது தாய் தெய்வானை, தனது கணவர் செய்து வந்து தொழிலை விடாமல் செய்து கொண்டும், கணவரின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார். தற்போது மூத்தமகன் வினோத்குமார் சென்னையில் உள்ள தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.  

இளையமகன் அசோக்குமார் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு சென்னை மற்றும் டெல்லியில் உள்ள சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து தேர்வு எழுதி 4 முறை தோல்வியுற்றார். இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து படிக்க வேண்டும் என தனது தாய் தெய்வானை ஊக்கம் அளித்துள்ளார். இதனால் தற்போது 5-வது முறை தேர்ச்சி பெற்றுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில், இந்திய அளவில் 438-வது இடத்திலும், மாநில அளவில் 9-வது இடத்தை பெற்று அசோக்குமார் தேர்ச்சி பெற்றுள்ளார். 4 முறை தோல்வியுற்றாலும், மனம் தளராமல் 5-வது முறை தேர்ச்சி பெற்றுள்ளதால் மறைந்த தனது தந்தை ராஜூவின் கனவை நிறைவேற்றியதாக அவரது தாய் தெய்வானை ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். 

தனது வெற்றிக்கு தாயின் ஊக்கமும், விடா முயற்சியே காரணம் என அசோக்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற அசோக்குமாரின் உறவினர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்து வருகின்றனர்.

தகவல்கள் : சே.விவேகானந்தன், செய்தியாளர்-தருமபுரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com