தருமபுரி: ஷூவை கழற்றி தாக்க முற்பட்ட SSI... என்ன நடந்தது? வெளியான சிசிடிவி காட்சி!
தருமபுரியில் உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டதால், கடையின் உரிமையாளரை, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஷூவை கழற்றி தாக்க முற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள உணவகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த உணவகத்தில் சாப்பிட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரியிடம், கடையின் உரிமையாளர் முத்தமிழ், ஏற்கனவே நிலுவையில் உள்ள பணத்தை (ரூ 20) தருமாறு கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற எஸ். எஸ்.ஐ. காவேரி, கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. பின் பணத்தை வீசியெறிந்த எஸ்.எஸ்.ஐ காவேரி, முத்தமிழுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில், தான் அணிந்திருந்த ஷூவை காலில் இருந்து கழற்றி அடிக்க முற்பட்டுள்ளார். கடையில் இருந்தவர்கள் தடுத்ததால், காவேரி அங்கிருந்து சென்றுள்ளார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து தருமபுரி டி.எஸ். பி. சிவராமன் விசாரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.