ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்து மரியாதை செலுத்திய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!

ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்து மரியாதை செலுத்திய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!
ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்து மரியாதை செலுத்திய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!
Published on

தருமபுரியில் அடையாளம் தெரியாமல் இறந்து, மருத்துமனையில் 6 மாதமாக ஆதரவற்று இருந்த 8 சடலங்களை அடக்கம்செய்து மரியாதை செலுத்திய தருமபுரி நகர காவலர்களின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுவந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் என 8 பேரின் உடல்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் கடந்த 6 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இறந்தவர்களின் புகைப்படம், அடையாளம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் உறவினர்கள் யாரும்  உடல்களை அடையாளம் காட்டி வாங்கிச்செல்ல வரவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 6 மாதங்களாக வைக்கப்பட்டு, உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச துவங்கியதால், 8 உடல்களையும் புதைக்க தருமபுரி நகர காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பிரேத பரிசோதனைக் கூடத்திலிருந்த உடல்களை தருமபுரி நகராட்சி மயானத்திற்கு எடுத்துச்செல்ல பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு வெளியே 8 உடல்களை காவல்துறையினர் எடுத்து வைத்தனர். ஆனால் சடலங்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச்செல்ல சுகாதாரத் துறையினரும், நகராட்சி நிர்வாகமும் முன் வரவில்லை.

இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் காவல்துறையினர் செய்வது அறியாமல் உடல்களின் அருகே காத்திருந்தனர். நீண்டநேரம் கழித்து அமரர் ஊர்தியில் உடல்களை எடுத்துச்சென்று ஆட்களை வைத்து குழிதோண்டி, 8 உடல்களையும் காவல்துறையினரே நல்லடக்கம் செய்து, மரியாதை செலுத்தினர்.

அடையாளம் தெரியாத 8 பேரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய, தருமபுரி நகராட்சிக்கு காவல்துறையினர் தகவல் அளித்தும், நகராட்சி நிர்வாகம் சடலங்களை அடக்கம் செய்ய முன்வரவில்லை. எனவே தருமபுரி நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முருகேசன், சுந்தரராஜன், காவலர்கள் மணிவண்ணன், வேலு ஆகிய  நான்கு பேரும் தங்களது சொந்த செலவில் ஆட்களைவைத்து குழித்தோண்டி ஆதரவற்று இருந்த 8 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்தனர். மேலும் அவர்களுக்கு உறவினர்கள் செய்யவேண்டிய ஈமக்காரியங்களை செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிரோடு இருக்கும்போது கைவிட்ட உறவினர்கள், இறந்தபிறகும் வராத நிலையில், காவல்துறையினரே 8 பேரின் உடலை நல்லடக்கம் செய்த சம்பவத்தால், காவலர்களின் மனிதநேயத்தைக் கண்டு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com