அறிவியல் முன்னேற்றங்கள், ஒவ்வொன்றிலும் மாற்றங்களைப் பரிசளித்து வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறது... இந்த வரிசையில், திரை ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை பரவசமாக்க அதிநவீன திரையரங்கம் தயாராகியுள்ளது...
திரையில் கதை சொல்லும் கலையின் நவீன வடிவமான திரைப்படத் துறை, ஒவ்வொரு அம்சத்திலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது... அதை திரையிட்டு, ரசிகர்களை மகிழ்விக்கும் தலமான திரையரங்குகளின் வடிவமும், ஒவ்வொரு நாளும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது... மணலைக் கூட்டி அமர்ந்த டூரிங் டாக்கீஸ் தொடங்கி, மல்டிப்ளக்ஸ் வரையிலும், தொழில்நுட்பங்களில் DTS, 3D, I Max, Laser Dolby உள்பட நவீனத்திலிருந்து அதிநவீனமாக உருவெடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சியின் மேலும் ஒரு படி, தமிழ்நாட்டில் முதல்முறையாக, தருமபுரியில் தடம் பதிக்க காத்திருக்கிறது... மிகப்பெரிய பலூனுக்கு உள்ளே இருந்து திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்கும்... இந்த கற்பனையின் செயல்வடிவம் தான், Balloon Modern Cinema Theatre...
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கிராமத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரான ரமேஷ் என்பவர், தனது சொந்த ஊரில் இந்த Balloon Modern Cinema Theatre-ஐ நிறுவியுள்ளார்... திரைப்படத் துறை மீதான ஆர்வத்தில், நவீன வசதிகளுடன் புதுமையான திரையரங்குகளை உருவாக்கும் ஆசையில், டெல்லியைச் சேர்ந்த Picture Time நிறுவனத்துடன் இணைந்து, 50 சென்ட் நிலத்தில் இதை அமைத்துள்ளார்...
கட்டுமானம் இல்லாமல், ராட்சத பலூன் மற்றும் கன்டெய்னர் மூலம் ஒட்டுமொத்த திரையரங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கும் அனுபவத்தை பரவசமாக்கும் முயற்சியே இது..
இதுகுறித்து ரமேஷ், பலூன் திரையரங்க உரிமையாளர், பேசுகையில், "மிகச்சிறந்த ஒலி அமைப்புடன் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் இருக்கும் சிறந்த திரையரங்குகளைப் போலவே வடிவமைத்துள்ளோம். உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. திருமணம், பிறந்த நாள் விழாக்களை மகிழ்சியுடன் கொண்டாடலாம். கோழிக்கோட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட, பசுமை மாறாத செயற்கை புல்வெளியுடன் அழகிய பூங்காவும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது... பலூன் திரையரங்கை வெறும் 3 மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றிடலாம்... இந்த பலூன் திரையரங்கை வேறு இடத்துக்கும் எடுத்துச் செல்லாம் பலூன் திரையரங்கை ஒரு வாரத்தில் வேறு இடத்திற்கு மாற்றிடலாம். தீ தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளது" என்கிறார்.
140 இருக்கைகளைக் கொண்ட இந்த பலூன் திரையரங்கில், கிராமப்புற திரையரங்குகளின் கட்டணமே நிர்ணயிக்கப்பட உள்ளது. கிராமப் புறத்தில் குறைந்த செலவில் மிகச்சிறந்த திரை அனுபவத்தைப் பெற முடியும். 20 ஆயிரம் சதுர அடியில் பலூன் திரையரங்கை நிறுவிடலாம். வாகன நிறுத்தகம், ஆபரேட்டர் அறை உள்பட அனைத்தையும் அமைக்க முடியும்.
பலூனுக்கு உள்ளே திரையரங்கம் இருக்கும் இந்த முறை, ஜெர்மன் நாட்டின் திரையிடல் முறையாகும். திரை அனுபவத்தை சிலிர்ப்பூட்ட காத்திருக்கும் இந்த பலூன் திரையரங்கம், ரசிகர்களின் மனதைக் கவரத் தவறாது என நம்பலாம்.