கொரோனாவால் நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றிணைந்த தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் குதுகலமாய் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை விடுப்பட்டுள்ளது. இதனால் இன்று எல்லா இடங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை முதலே பொங்கல் விழா களைகட்டத் தொடங்கியது. கொரோனா விடுமுறையால், நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரியில் ஒன்றிணைந்த மாணவ, மாணவிகள் குதுகலமாய் பொங்கலை கொண்டாடினர்.
சுமார் இருபது பாடப்பிரிவுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் பயிலும் மாணவ மாணவிகளும் குழுவாக சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ந்தனர்.
மேலும் ஒரே மாதிரி குழுவாக பாரம்பரிய உடைகள் அணிந்து தமிழர் திருநாளைக் கொண்டாடிய மாணவ மாணவிகள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கும்மிப்பாட்டு பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பொங்கல் விழாவிற்கு அரசு கலைக் கல்லூரி நிர்வாகமும் ஏற்பாடுகளையும் செய்து இருந்தது.
பணம் படைத்தவர்கள் பயிலும் தனியார் கல்லூரிகளில் மட்டுமே சிறப்பான முறையில் பிரமாண்டமாக பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய கிராம புறத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயிலும் அரசு கலைக் கல்லூரியில் குதுகலமாய் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
கொரோனோ ஊரடங்கு காரணமாக நண்பர்கள் பிரிந்திருந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர்.