தருமபுரி மாவட்டம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவத்தில், மெத்தனமாக செயல்பட்ட காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மலர்விழி உறுதியளித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிட்லிங் மலைக்கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசால் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இருவரையும், 48 மணிநேரத்தில் கைது செய்து அவர்கள் மீது பிணையில் வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது விசாரணைக்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிராம மக்களின் கோரிக்கையின்படியே மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்லிங் மலைவாழ் மக்களின் பாதுகாப்புக்காக விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உறுதியளித்துள்ளார்.