தருமபுரி அருகே சமையல் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள எண்ணெய் கொட்டியது. பொதுமக்கள் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் ஆயில்மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து சுமார் 25 டன் சமையல் எண்ணெய்யை டேங்கர் லாரியில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள எண்ணெய் பாக்கெட் செய்யும் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் பகுதி மேடாக இருக்கும் என்பதால் அவ்வழியாக செல்லாமல் கிருஷ்ணகிரி - தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காவேரிப்பட்டினம் சென்று அங்கிருந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை வழியாக ராயக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை டேங்கர் லாரி காடு செட்டிப்பட்டி அருகே பெரிய தப்பை என்ற பகுதியில் செல்லும்போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் பின்னோக்கி சென்றது. உடனே ஓட்டுநர் மணி பொதுமக்கள் உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் சாமர்த்தியமாக அருகிலுள்ள முருகேசன் என்பவருடைய நெல் வயலில் லாரியை இறக்கினார்.
அப்போது லாரி கவிழ்ந்தது. லாரியில் இருந்த ஓட்டுநர் மணி குதித்து உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து கவிழ்ந்த லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொட்டிய எண்ணெய்யை குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து கவிழ்ந்த லாரியை மீட்டனர். இந்த விபத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள எண்ணெய் வீணானது.