”இங்கிருந்த ஆழ்துளைக்கிணறு, மின்மோட்டாரை காணவில்லை”- திருப்பூர் சுயேச்சை கவுன்சிலர் புகார்

”இங்கிருந்த ஆழ்துளைக்கிணறு, மின்மோட்டாரை காணவில்லை”- திருப்பூர் சுயேச்சை கவுன்சிலர் புகார்
”இங்கிருந்த ஆழ்துளைக்கிணறு, மின்மோட்டாரை காணவில்லை”- திருப்பூர் சுயேச்சை கவுன்சிலர் புகார்
Published on

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பொதுமக்களின் தேவைக்காக போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார் உள்ளிட்டவைகளை காணவில்லை கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் இரண்டாவது நகர்மன்ற கூட்டம் நகரசபை தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இரண்டு பேர் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 27 திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் 5 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் முபாரக் அலி அதிகாரிகள் மீது புகார் கூறினார்.

அவர் பேசுகையில், ‘’எனது வார்டு பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்ய ரூ.20 லட்சம் செலவில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறு, அதிலிருந்த மின்மோட்டார், மின்இணைப்பு மற்றும் தண்ணீர்த்தொட்டி மற்றும் பெட்டிகளை கூண்டோடு காணவில்லை. இவற்றை ஆய்வுசெய்து கண்டுபிடித்து பொதுமக்களின் உபயோகத்திற்கு வழங்கக்கோரி கடந்த 15 நாட்களுக்கு முன் இதே கூட்டத்தில் புகார்கூறியும் நகராட்சி அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யாரை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. உடனடியாக எங்களுடைய ஆழ்குழாய் கிணறைக் கண்டுபிடித்து தரவேண்டும்’’ என காரசாரமாக வாதிட்டார். மேலும் 30 உறுப்பினர்களுக்கும் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என வார்டு உறுப்பினர்கள் புகாரை முன்வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com