தாராமங்கலம்: 500 காளைகளுடன் முதல் முறையாக நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

தாராமங்கலம்: 500 காளைகளுடன் முதல் முறையாக நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
தாராமங்கலம்: 500 காளைகளுடன் முதல் முறையாக நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
Published on

ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் நேரில் வந்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 300-க்கும் மேற்பட்ட நாட்டு இன காளைகளை வளர்த்து வருகின்றனர். இந்த காளைகளை வெளி மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், எருதாட்டம், மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளில் அழைத்து சென்று பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில், தற்போது உள்ளூரிலேயே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேவையான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. அதனால், அங்கு ஜல்லிக்கட்டு நடத்த தாரமங்கலம் வட்டார மக்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து போட்டி நடத்துவதற்கான இடம், அடிப்படை வசதிகள், அனுமதி குறித்து ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்க தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரனின் உதவியை நாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தாரமங்கலம் வந்து பவளத்தானூர் பகுதியில் ஜல்லிகட்டு பேரவை தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவைப்படும் இடம், மாடுபிடி வீரர்கள், காளைகள், பரிசோதனை செய்ய தனி கூடாரம், பாதுகாப்பு வசதி, பாதை வசதி மற்றும் அரசு அனுமதி பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும், கிராம மக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது சேலம் மாவட்டத்தில் கூலமேடு, தம்மம்பட்டி, நிலவாரப்படி உள்ளிட்ட இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்து வருகிறது. இந்தநிலையில், முதல் முறையாக நடப்பாண்டு முதல் தாரமங்கலம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை அழியாமல் பார்த்துக் கொள்ளவும், நாட்டு இன காளைகள் வளர்ப்பதை ஊக்குவிக்கவும் இந்த விளையாட்டு போட்டிகளை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு அனுமதி பெற்று சட்ட விதிமுறைகளை பின்பற்றி நடத்துகிறோம். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான நிலம் மற்றும் 500 காளைகள் தாராளமாக உள்ளது. அரசு அனுமதி பெற்ற உடன் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com