தனுஷ்கோடி புயலும்., ஜெமினி கணேஷன் - சாவித்திரியும்.

தனுஷ்கோடி புயலும்., ஜெமினி கணேஷன் - சாவித்திரியும்.
தனுஷ்கோடி புயலும்.,  ஜெமினி கணேஷன் - சாவித்திரியும்.
Published on

நம் காலடியில் விரிந்து கிடக்கும் கடல் ஒரு விசித்திர மனநோயாளி. பசிக்கு உணவை அள்ளிக் கொடுக்கும் அது; எதிர்பாராத நேரத்தில் புயலாக மாறி நம்மையே தின்று சிரிக்கும். பூமியில் கடல் பிறந்தது முதல் எத்தனையோ பேரழிவுகளை கொடுத்திருந்தாலும் அழிந்து போன தனுஷ்கோடி நிரந்தர வடு. வாழ்ந்து கெட்ட வீடொன்றின் கருப்பு வெள்ளை சித்திரம்.

ராமேஸ்வரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கைகுலுக்கி சந்திக்கிற புள்ளியில் இருந்த துறைமுக நகரம் தனுஷ்கோடி.

ஒரு துறைமுகம், ஒரு ரயில்வே ஸ்டேஷன், தபால் தந்தி அலுவலகம், சுங்க அலுவலகம், பள்ளிக்கூடம், இவற்றைச் சூழ்ந்து வாழ்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள், தினமும் நூற்றுக்கணக்கில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், துறவிகள் என, இயங்கி வந்தது தனுஷ்கோடி. மீன், கருவாடு, உப்பு போன்றவை அங்கிருந்து ஏற்றுமதியாகின.

இர்வின், போஷன் என்ற இரண்டு நீராவிக் கப்பல்கள் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை சென்று வந்தன. தவிர, சென்னை எழும்பூரிலிருந்து இயங்கிவந்த ‘இந்தோ-சிலோன் போட் மெயில்’ என்ற ரயில் சேவை குறிப்பிடத்தக்கது. இந்தியாவையும் இலங்கையினையும் வெறும் 80 ரூபாய் கட்டணத்தில் இணைத்தது அந்த ரயில். தனுஷ்கோடியில் இறங்கி தயாராக இருக்கும் கப்பலில் ஏறினால் தலைமன்னாரில் இறங்கலாம்.

இப்படியாக தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக வாழ்ந்து வந்த தனுஷ்கோடியின் தலையை அதுவரை வருடிக் கொடுத்த வங்கக் கடலே ஓங்கி அடித்தது.

22 டிசம்பர் 1964. பேய்க் காற்றோடு பெருமழை பெய்ய, பேரலைகளும் ஓங்கி உயர்ந்து மிரட்ட… அன்று காலையிலிருந்தே தனுஷ்கோடி அலறிக்கொண்டிருந்தது.

3 நாட்கள் முன்னதாக வங்கக் கடலில் உருவான சின்னப் புயல், வலுவான புயல் சின்னமாக வடிவெடுத்தது. வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் மக்கள். நேரம் ஆக ஆகப் பொழுதும், பீதியால் மக்களுக்கு கண்களும் இருட்டிக் கொண்டு வந்தன. கொந்தளித்த கடலில் ஆவேசமாக எழும்பிய ராட்சத அலைகளைக் கண்டு குலை நடுங்கினர் மக்கள்.

ஓயாத புயல் மழை புரட்டிக் எடுக்க, எங்கும் அடர் இருட்டு அப்பியிருந்த நள்ளிரவு. அடுத்து நடக்கப் போகிற அந்தப் பயங்கரத்தின் முதல் பலி தான்  என்று தெரியாமலேயே, தனுஷ் கோடி நோக்கி ஊர்ந்து வந்தது பாம்பன் தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில். அப்போது மணிக்கு சுமார் 250 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த புயல் தனுஷ்கோடியை மூர்க்கத் தனமாகத் தாக்கத் தொடங்கியிருந்தது.

சிக்னல் சிதைந்து போயிருந்ததால், பாசஞ்சர் ரயில் ஒரு தயக்கத்துடன், பயத்துடன் ஊரை நெருங்கியது. பெரும்பசியில் பேயாக அலைந்து கொண்டிருந்த பேரலையொன்று ரயிலை கடலுக்கு உருட்டித் தள்ளியது. 7 பெட்டிகளில் இருந்த 100-க்கும் அதிகமான மக்கள் உயிரோடு ஜல சமாதி ஆயினர். தாயே பிள்ளையை கொன்ற கதை போலாது அந்த தாக்குதல்

தனுஷ் கோடியை தகர்ந்தது, குடிசைகள் கரைந்தன. வீடுகள் இடிந்தன. கூரைகள் பறந்தன. மின் மற்றும் தந்திக் கம்பங்கள் சரிந்தன. சீறிப்பாய்ந்த அலைகள், கரையில் நின்ற ஊரின் கையைப் பிடித்து கடலுக்குள் தள்ளிக் கொன்றது. தனுஷ்கோடி மூச்சுத் திணறிச் செத்தது.

அலையோடு போனவர்கள் எக்கச்சக்கம். வீடோடு மூழ்கியவர்கள் ஏராளம். குழந்தைகளைத் தலையின்மேல் தூக்கிக் கொண்டும், முதியவர்களை தோளில் சுமந்து கொண்டும் இடுப்பளவு வெள்ளத்தில், மிச்சமிருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தட்டுத் தடுமாறி ஓடினர். உயரமான மணல் மேடுகளில் ஏறி நின்று கொண்டதால் சொற்ப உயிர்கள் தப்பின.

பொழுது விடிந்து பார்த்தால் தனுஷ்கோடி செல்லாத பணமாக கிழிந்து கிடந்தது, கடல் எது, ஊர் எது எனத் தெரியவில்லை எங்கும் வெள்ளம் அதில் மிதக்கும் சடலங்கள் என திறந்த வெளிப் பிணவறையாக மாறியிருந்தது தனுஷ்கோடி.

கடல் நீர் சூழ்ந்த கண்ணீர்த் தீவாக தனுஷ் கோடி மாறிய தகவலை அறிந்து தமிழகமே அதிர்ந்தது. அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் தனுஷ்கோடிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இறங்கியது இந்திய ராணுவம். இச்சம்பவத்தை மத்திய அரசு, ’தேசியப் பேரிழப்பு’ என்றும். ஐ.நா.சபை, ஆசியாவில் நிகழ்ந்த 20’ஆம் நூற்றாண்டின் பேரிழப்பு எனவும் அறிவித்து, தனுஷ்கோடியில் நிகழ்ந்த பயங்கரத்தை உலகிற்கு உணர்த்தியது.

கணக்கில் வந்த பிணங்கள் 2000. கடல் கடத்திக் கொண்டு போனவர்களின் எண்ணிக்கை அதிகம் தான். 3 கிராமங்கள் முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிட்டன என்பது மூச்சி திணரும் வலி.

இந்தப் பயங்கரத்தின் போது அப்போதைய நட்சத்திர தம்பதியான ஜெமினி கணேசன் சாவித்திரி இருவரும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அன்று மாலையே ராமேஸ்வரம் திரும்பியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக ராமேஷ்வரம் சென்றிருந்த தனுஷ்கோடி வாசிகள் கணிசமானோரும் தப்பினர்.

தனுஷ்கோடி வாழத் தகுதியற்ற நகரம் என அறிவித்தது அரசு. மயான பூமி ஆகிவிட்ட சொந்த மண்னை விட்டு ராமேஷ்வரம் உள்பட பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர் உயிர் தப்பிய மக்கள்.

அந்தப் புயலில் உயிர் தப்பியவர்களில் ஒருவர் சைலாவதி என்ற முதியவர்., அவர் இதுபற்றி

“அன்னைக்கு ராத்திரி எதோ நடக்கப் போகுது. இனிமே இந்து ஊரும் இல்ல நாமளும் இல்ல’னு மனசுல பட்டுச்சு. நான் என் பொஞ்சாதிய காப்பாத்த ஒரு சேலைய எடுத்து என்னயும் அவளையும் சேத்து கட்டிகிட்டேன், தப்பிச்சாலும் சரி, செத்தாலும் சரி ஒன்னாவே ஆகட்டும்னு சொன்னேன். அவ அழுதுகிட்டே என்னைய கட்டிக்கிட்டா. கூரைய பொளந்து தண்ணி என் வீட்டு உள்ள வந்தது. சில நொடி தாமசமில்ல ரெண்டு பேரும் மூழ்கிப் போனோம், மூஞ்சி மூக்கு எல்லாம் உப்புத் தண்ணி சேறு மண்ணு அப்ப., திடீர்னு சாமியா வந்த ஒரு அலை எங்கள தூக்கி வெளிய எறிஞ்சது. நான் என் பொஞ்சாதிய தூக்கிட்டு ஒரு பெரிய சுவத்து மேல ஏறி ராத்திரி பூரா அங்கயே இருந்தேன். சுத்தி இருட்டு ஒன்னும் கண்ணுக்கு தெரியல. விடிய வெளிச்சம் வந்து பாத்தா எங்களச் சுத்தி நூத்துக் கணக்கான பிணங்க மிதக்குது, அங்கனைக்கு அங்கன எங்களப் போல தப்பிச்ச சிலர் எல்லாம் ஒன்னாச் சேந்து கட்டி பிடிசு அழுதோம். இப்ப நினச்சாலும்…” எனச் சொல்லி உடைந்து அழுதார்.

55 வருடங்கள் ஆகியும் அந்தப் பயங்கரத்தின் பரிதாப சாட்சிகளாகப் பாழடைந்த ரயில்வே ஸ்டேஷனும், சிதைந்துபோன சர்ச்சும், எலும்புக் கூடுகளாக சில வீடுகளும் தான் எஞ்சி நிற்கின்றன. வேடிக்கை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலிக்காமல் தாங்கள் வாழ்ந்து கெட்ட கதையை சொல்லிக் கொண்டிருக்கிறது தனுஷ்கோடி.

வர்த்தக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றிய கடல் எந்த குற்ற உணர்சியும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com