செய்தியாளர் - அ.ஆனந்தன்
-------------
சென்னை - தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964-ல், டிசம்பர் 17ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது புயலாக உருவெடுத்து அடுத்த ஐந்து நாட்களில் தனுஷ்கோடியை தாக்கியது. இதில் தனுஷ்கோடி தரைமட்டமாகியது.
இக்கோர சம்பவம் நடந்து முடிந்து 59 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனுஷ்கோடிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு 208 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில் பாதை அமைக்க சமீபத்தில் திட்டமிடப்பட்டது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடத்தில் ஜடாயு தீர்த்தம், கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
இதையடுத்து புதிய பாதை அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தின் மூலம் சர்வே நடந்தது. தொடர்ந்து, சென்னை ஐஐடி அதிகாரிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முதல் தனுஷ்கோடி பழைய ரயில் சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில்வே பாதையில் பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை விரைவில் அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. சுற்றுலாவை நம்பியே ராமேஸ்வரம் உள்ளதால், தனுஷ்கோடிக்கு விரைந்து ரயில் சேவையை கொண்டு வரவேண்டும் என்பதே அங்குள்ளோரின் கோரிக்கையாக இருக்கிறது.