தனுஷ்கோடியில் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாமென போலீசார் தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்
கடந்த ஒருவார காலமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மேகமூட்டத்துடன் கடல் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காணப்பட்டு வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் சூறைக்காற்று வீசி வந்தது.
இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல்பகுதி, தனுஷ்கோடி, அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் சூறைக்காற்று வீசி வருகிறது. ராமேஸ்வரம் சுற்றுலா தளம் என்பதால் தனுஷ்கோடியில், ஐயப்ப பக்தர்களும், வெளி மாநில பக்தர்களும் அதிக அளவில் திரண்டு இருந்தனர்.
இதையடுத்து மெரைன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகளை கடற்கரையில் இறங்க தடை விதித்துள்ளனர். மேலும் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி செல்ஃபி எடுத்தவர்களை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு உள்ளே இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் மாலை 6 மணிக்கு மேல் தனுஷ்கோடி செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதோடு, நாளை காலை முதல் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை வரை அனுமதிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.