சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து உரிய புலன்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்னை சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால்,தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அதில் தேன்மொழி கை விரல் மற்றும் தாடை பகுதியில் காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் அங்கேயே நிலை குளைந்து சரிந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். இதற்குள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். அதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் கொலை முயற்சி நடந்த இடத்தை இரயில்வே காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், பாதிக்கப்பட்ட தேன்மொழி தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுரேந்தரின் உடல் நிலை சற்று கவலைக்கடமாக உள்ளது. கொலை முயற்சி நடக்கும் முன்னதாக ரயில்வே காவலர் இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். அதன் பின்பே கொலை முயற்சி நடந்துள்ளது. தற்போது கொலை முயற்சி குறித்து புலன்விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவாதி கொலைகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் தலையிட்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை பொருத்தவரை ஓரிரு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் முழுவதுமான பணி இன்னும் முடிவடையாத காரணத்தால் சிசிடிவி பொருத்தும் பணியானது தடைபட்டுள்ளது என்று கூறிய அவர், கூடிய விரைவில் முழுமையாக பணியானது முடிக்கப்படும் என்றார்.
மேலும் வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வு நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப்படும் என்றும் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.