செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அழகர்கோயிலில், ஆடி பெருந்திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் சுந்தரராஜா பெருமாள் என்ற கள்ளழகர் சிம்மம், அன்னம், தங்கக் குதிரை என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், ஆடி பௌர்ணமி நாளான இன்று, ஆடித் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டவாறு வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்து இன்று மாலை ஆண்டுக்கு ஒருமுறை ஆடி பௌர்ணமி நாளில் நடைபெறும் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி திருக்கதவுகளுக்கு சந்தன சார்த்தி கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜை நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து நாளை தீர்த்தவாரி, நாளை மறுநாள் உற்சவ சாந்தியுடன் ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.