செய்தியாளர்: மாதவன் குருநாதன்
இன்று மாலை நடைபெற உள்ள குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குடி குரு சன்னதியில் குரு பகவானை தரிசிக்க அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குரு பகவானை தரிசித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குரு பகவானை தரிசித்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், போதுமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 700-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்காக பந்தல் போடப்பட்டுள்ளது. அதேபோல் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகிய இரண்டிலும் பக்தர்கள் குரு பகவானை தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று மாலை சரியாக 5 மணி 19 நிமிடத்திற்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.