செய்தியாளஎர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 5 பெண் பக்தர்கள், ஒரு ஆண் பக்தர் என மொத்தம் 6 பேர் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தபடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்களது பெயர் ராசிகளை கூறி தமிழில் அர்ச்சனை செய்தனர். அதைத் தொடர்ந்து வள்ளி குகை அருகே யாகம் வளர்த்து சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மூலவர் சமாதியில் தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திருச்செந்தூர் கோவில் முன்பு அமர்ந்திருந்த யாசகர்கள் அனைவருக்கும் வேஷ்டிகளை தானமாக வழங்கினர். கோவிலுக்கு வந்ததும், மக்களை சந்தித்தும் மிகவும் மகிழச்சியாக இருப்பதாக யாசகர்களிடம் ஜப்பான் மொழியில் பேசினர்.
இறுதியாக வணக்கம் என்று தமிழில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். இந்த ஜப்பான் குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.