திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம்பெயர்ந்தார்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்.
முந்தைய காலங்களில் சனிப்பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கானோர் வழிபட வருகை தந்த நிலையில், இந்தாண்டு கொரோனா காரணமாக பக்தர்களின் நலன் கருதி, கோயில் நிர்வாகம் 48 நாட்களுக்கு சனீஸ்வரனை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியது. அதன்படி முன்பதிவு செய்த பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்தபடி அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சனி பகவானை தரிசித்தனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இதேபோல் சென்னை, தேனி, திருவாரூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சனி பகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம் செய்தனர்.