பழனி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாத் தொற்று காரணமாக பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலினுள் பக்தர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசானது தளர்வுகளை அறிவித்த நிலையில் கடந்த மாதம் முதல் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
நாளை முதல் பழனி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்து வந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பழனி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி கூறியதாவது “ ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சூரசம்ஹாரம் விழாவானது பழனி கோயிலில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கும். அந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படாது.
15-ஆம் தேதி முதல் கந்தசஷ்டி திருவிழா நிறைவடையும் நாள்வரை பக்தர்கள் காலை எட்டுமணிக்கு மேல்தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் மற்றும் திருகல்யாண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.கோயில் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்க நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.