முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற ஓ.பன்னீர்செல்வம் சென்ற நிலையில், அங்கு தினகரன் அணி மற்றும் ஓ.பி.எஸ் அணியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
தேவர் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் 13 கிலோ தங்கக் கவசம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இந்த கவசத்தை மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்திருக்கவும், ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின்போது, அதிமுக பொருளாளர் மூலமாக விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஜெயலலிதாவால் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, கவசத்தை அதிமுகவின் எந்த அணியிடம் தருவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் தினகரன் அணி சார்பில் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி வங்கிக்கு கடிதம் அனுப்பட்டது.
ஆனால் தேவரின் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வங்கி முடிவு செய்தது. இதற்காக நினைவிட பொறுப்பாளருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று வங்கிக்கு வருகை தந்தனர். அப்போது அங்கு தினகரன் ஆதரவாளர்களும் குவிந்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் தங்களையும் வங்கிக்குள் அனுமதிக்குமாறும், தங்களிடம் தான் கவசத்தை தர வேண்டும் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக, தங்க கவசத்தை வழங்குவதில் இழுபறி நிலை நீடித்துவருகிறது.