தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மதுரை ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை தேவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு அணிவித்தார்.
ரூ.4.5 கோடி மதிப்பிலான இந்தத் தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின்போது அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழா முடிந்ததும் தங்கக் கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்த ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் தங்கக் கவசத்தை பெறுவதில் பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்பு இடையே கடும் போட்டி நிலவியது. தங்கக் கவசத்தை பெறுவதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கிக்கு இன்று காலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வந்தனர். அதனைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வங்கிக்கு வந்தார். அதனைப்போல டிடிவி தினகரன் தரப்பும் வங்கிக்கு வந்து தங்க கவசத்தை தங்களிடம்தான் தர வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனால் தங்கக் கவசத்தை யாருக்கு வழங்குவது என்ற பிரச்னையால் சுமார் 5 மணி நேரம் இழுபறி நீடித்து.
முடிவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்கக் கவசத்தை வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பார். பின்னர் தங்கக் கவசம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிக்கப்படும்.