500 கோடி மோசடிப் புகார்..நிலுவையில் 144 புகார்கள்.. தேவநாதன் கைதின் பின்னணி என்ன?

500 கோடி மோசடிப் புகார்... நிலுவையில் 144 புகார்கள்.. தேவநாதன் கைதின் பின்னணி என்ன?. விரிவாக பார்க்கலாம்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதனை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், தேவநாதன் மீதான ஒரு புகாரில்தான் கைது செய்யப்பட்டுள்ளார், இன்னும் அவர்மீது 144 புகார்கள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவித்துள்ளது காவல்துறை. என்ன நடந்தது?

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 1872 ஆம் ஆண்டு முதல், 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, தேவநாதன் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டவர்கள், நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களான, அவர்கள் தங்களின் ஓய்வூதியத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், முதலீடு செய்தவர்களின் 525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியும் முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.

தவிர, நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள், பணம் இல்லாமல் வங்கியிலிருந்து திரும்பிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, கடந்த 6-ம் தேதி மயிலாப்பூர் நிதி நிறுனம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தேவநாதன்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு!

தொடர்ந்து, அடையார், காந்தி நகரை சேர்ந்த பிரசாத் என்பவர் அளித்த புகாரில் விசாரணை செய்து கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் புதுக்கோட்டையில் வைத்து தேவநாதனை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவருடன் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான, குணசீலன், மகிமைநாதன் என்கிற இருவரையும் கைது செய்துள்ளனர். நேற்று, நீண்ட நேரம் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், அவரை நீதிபதிக்கு முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேவநாதன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக, தாமரைச் சின்னத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர். இந்த விவகாரம் குறித்து, கடந்த ஏப்ரல் மாதமே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சீனிவாசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்ட பெண் என ஒருவரின் ஆடியோவையும் வெளியிட்டார்.

ஆனால், ``வட்டி கொடுப்பதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. சிவகங்கையில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தோல்வி பயம் காரணமாகவே, ஆனந்த் சீனிவாசனை வைத்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்’’ என பதிலளித்திருந்தார் தேவநாதன். இந்தநிலையில், நேற்று முன்தினம் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை,

``இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ், தமிழகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு பாஜக உறுதியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.. அதே நேரத்தில், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக்காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com