சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார். மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.
‘இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி உறுதி’ என விளம்பரம் செய்யப்பட்டது. அதை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மயிலாப்பூர் போலீசாரின் அறிவுரைப்படி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சுமார் 140 க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டது. அவர்களும் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 13 ம் தேதி திருச்சியில் வைத்து தேவநாதன் மற்றும் நிதி நிறுவனத்தில் இயக்குநர்களான குணசீலன், மகிமை நாதன் ஆகிய 3 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தேவநாதன் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி அலுவலகம், தேவநாதனின் அலுவலகம் ஆகியவற்றுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். இந்த நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தில் இயக்குநர்களான சாலமன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.