வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது இன்னும் நிற்காமல் பெய்தபடியே இருந்துவருகிறது. இன்றிரவு முழுவதும் மேகம் வலுவடைந்து அதி கனமழை இருக்கும் என கூறப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் ஆரம்பித்து இரவு வரை பதிவான மழையின் அளவு எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.
முதலில் அக்டோபர் 15-ம் தேதியான இன்று கனமழை இருக்கும் என சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில், தொடர் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையை சுற்றிய பல்வேறு பகுதிகளில் 10 செமீட்டருக்கும் மேலாக மழை பதிவானது.
அதிகபட்சமாக மணலியில் 23செமீ மழையும், கத்திவாக்கம், பெரம்பூர், கொளத்தூர், ஆயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 21செமீ மழையும் பதிவாகியுள்ளது. மற்ற 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 10செமீ-க்கும் மேலாக மழை பதிவாகியுள்ளது.