பொள்ளாச்சி கொடூர வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய முகநூல் பதிவில், “பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது.
இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழக அரசின் ஆணையையும் அவர் பதிவிட்டிருந்தார். ஆனால், அதிலிருந்த பாதிகப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை மறைத்துவிட்டு அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதில், விசாரிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.