வீட்டில் இருக்கும் போது அனைவரும் தங்களது தாய்மொழியில் தான் பேச வேண்டும் என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய வெங்கய்ய நாயுடு தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். தமிழும், தமிழ்நாடும் மனதிற்கு நெருக்கமானவை என்று கூறினார்.
அத்துடன் தாய்மொழியையும், நமது உணவு முறையையும் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றார். வீட்டிலும், வெளியிலும் தாய்மொழியில் தான் பேசவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிய வெங்கய்யா நாயுடு, தாய்மொழி கண் போன்றது பிறமொழிகள் கண்ணாடி போன்றவை என்று தெரிவித்தார். பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம் தான் என்றாலும், தாய்மொழியில் பேசுவதை ஒரு போதும் கைவிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.