காட்டாங்கொளத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (42). இவர் கடந்த 10 ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையில் இருந்து பணிமாறுதலில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் 1 மாதத்திற்கு விடுமுறை எடுத்து ஓய்வு எடுக்க உள்ளதாக தன் மனைவியிடம் கூறியிருந்ததாக மனைவி தரப்பிலும் உறவினர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 17-ஆம் தேதி பார்த்திபன் திடீரென பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் மயக்க நிலையில் இருந்த பார்த்திபனை மீட்ட அவரது உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பார்த்திபனை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பார்த்திபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.