செய்தியாளர்: மணிகண்டபிரபு
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது நிகழ்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இவ்விழாவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,111 வீரர்களுக்கு ரூ. 42.96 கோடி மதிப்பிலாக பரிசுத் தொகையை வழங்கினார்.
முன்னதாக 255 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.39 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாகளையும், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் செய்ய வங்கிக்கடன் மானியம், ஆவின் விற்பனை நிலையம் என ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மேகநாதரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்...
“துணை முதல்வராக நியமித்த பிறகு சென்னைக்கு வெளியே கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்பதால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். 18 மாவட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்மாவட்டம் என்றாலே வீரத்திற்கு பெயர்போனவை. வீர விளையாட்டிற்கும் பெயர் போனவை தென் மாவட்டங்கள். விருதுநகர், கோவில்பட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி உள்ளனர். இன்னும் உருவாகி வருகின்றனர். செஸ் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், பிரக்யானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி பெருமை தேடித்தந்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு 38 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கி உள்ளார். தொடர்ச்சியாக விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி வழங்க உள்ளோம். கேலோ இந்தியா, கார் பந்தயம் உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு. பலதுறைகளில் முன்னணியில் உள்ளோம் என ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு அதிகமுள்ள மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிற்கே தமிழகம்தான் வழிகாட்டியாக முன்னோடியாக உள்ளது. யாராலும் வீழ்த்த முடியாத ஆல்-ரவுண்டராக தலைவர் கலைஞர் இருந்தார். அதனால்தான் கலைஞர் பெயரில் விளையாட்டு உபகரணம் வழங்கி உள்ளோம்” என தெரிவித்தார்.