மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நடக்க முடியாத சிறுமியை அவரது தந்தை கையில் சுமந்து சென்ற சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என நேற்று பிற்பகல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத் தெரிகிறது. ஆனால் அவருக்கு சக்கர நாற்காலியோ அல்லது ஸ்ட்ரெச்சரோ கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
இதனை அங்கிருந்த ஊடகத்தினரும், பொதுமக்களும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று அவரது மகளுக்கு ஸ்ட்ரெச்சர் உதவி வழங்கி வெளியே அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்