நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாயிருக்கிறது. தமிழக முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், திடீரென்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகிறது.
பொது இடங்களில் பேரணியை நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஒரு அரங்கத்திற்குள் மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில் இதனை ஏற்காத ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகிறது.