ஆன்லைன் மூலம் பண பெற முடியாது நேரடியாகதான் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனைக்கு வெளியே 3 மணி நேரம் காத்திருந்த பின் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு கொரோனாத்தொற்று உறுதியான நிலையில் அவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
வங்கிக்கணக்கில் பணம் இருந்த நிலையில், அஞ்சலியின் உறவினர்கள் ஆன்லைன் அல்லது ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ரொக்கமாக மட்டுமே பணத்தை செலுத்தமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அதனால் அஞ்சலியை மருத்துவமனைக்கு வெளியே உட்காரவைத்த இரண்டு பெண்களும் பணத்தை திரட்டச்சென்றுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், அலைந்து திரிந்து பணத்தைத்திரட்டி மருத்துவமனைக்கு வருவதற்குள் அஞ்சலி இறந்துவிட்டார். பெண்கள் என்பதால் அஞ்சலி உடலை அவர்களால் தூக்கக்கூட முடியவில்லை எனத் தெரிகிறது.
உடலை யாரும் அப்புறப்படுத்த முன்வராத நிலையில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் இருவர் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து அஞ்சலி உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து இறுதி யாத்திரை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.