உயிர் பறிக்கும் எமனாய் மாறியுள்ள டெங்குவின் அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
டெங்கு காய்ச்சல், கொசுக்கடியால் பரவக்கூடிய ஒருவகை வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் ஏடிஸ் ஈஜிப்ட் என்கிற குறிப்பிட்ட ஒரு வகை கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. இவை சுத்தமான நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து பரவுகின்றன. இவை பகலில் மட்டுமே கடிக்கும்.
அறிகுறிகள்
இந்த கொசு கடித்த பிறகு டெங்கு தீவிரமடைவதற்கு 3 முதல் 15 நாட்கள் வரை ஆகும். முதலில் குளிர், தலைவலி, கண்களை நகர்த்தும்போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். கால்களிலும், மூட்டுகளிலும் கடுமையான வலி தோன்றும். அதன்பிறகு, காய்ச்சலின் வீரியம் அதிகரித்து 104 டிகிரி வரைக்கூட செல்லும். கண்கள் சிவப்பது, முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது போன்ற அறிகுறிகளும் தென்படும்.
இந்த அறிகுறிகள் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை நீடிக்ககூடும். அதன் பின்னர் காய்ச்சல் தணிந்து அதிக அளவில் வியர்வை ஏற்படும். அதன் பிறகு ஒருநாள் நோயாளிக்கு குணமடைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதன் பின்னர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு உடலில் தடிப்புகள் ஏற்படும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் குணமடைந்து விடுவதாக மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளும், முதியவர்களுமே இந்த காய்ச்சலுக்கு அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டவுடனே அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சைப்பெற்றால் டெங்குவை எளிதில் குணமாக்கிவிடலாம்.