தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் சென்னையில் நீர் வழித்தடங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு கொசுவலை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில் கொசுவலை வழங்கும் நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கொசுவலைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்... சென்னையில் 2.60 லட்சம் பேருக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை பகுதியில் நீர் வழிப் பாதைகள் அருகில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இதனால் சைதாப்பேட்டை பகுதியில் மட்டும் 23 ஆயிரம் பேருக்கு கொசுவலைகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 55 நாள்களாக 48,187 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில், 76,08,504 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 14,256 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னையில் 3,562 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2,33,919 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 516 மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கொசு ஒழிப்பு, கொசு மருந்து தெளிப்பு பணிகளில் 3,278 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணிக்கு தேவையான 229 கைத் தெளிப்பான்கள், 120 விசைத் தெளிப்பான்கள் கையிருப்பில் உள்ளது. 31 டன் பிளீச்சிங் பவுடர் கையிருப்பில் உள்ளது.
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு கவனக்குறைவால் நிகழ்ந்தது என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதனால் தான் முதல்கட்ட மருத்துவர்கள் அறிக்கையை வைத்து, இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து காவல்துறை விசாரணை நடத்தும்.
இதையடுத்து மருத்துவக் குழு இறுதி அறிக்கை கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மேல் நடவடிக்கை இருக்கும். தமிழகத்தில் 20,000 மருத்துவர்கள் உள்ளனர். இதில், இரு மருத்துவர்கள் தவறு செய்துள்ளனர். அதுவும் நடக்கக் கூடாது என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.