தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான புள்ளி விவரங்களை தருவதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் திருமதி ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுதுறை அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி பணியாளர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அந்தந்த பகுதியில் நேரிடையாக சென்று ஆய்வு செய்து டெங்கு பாதிப்பிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.