குறைந்தபட்ச ஊதியம், காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும் உட்பட மொத்தம் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சென்னையில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் சென்னை சைதாப்பேட்டையில், `சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், சமையல் செய்ய வழங்கப்படும் சமையல் எரிவாயு தொகை ரூ.460 ஐ உயர்த்தி வழங்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது அவர்கள் சத்துணவு தயாரிக்க தேவையான உணவு பணியை முன்கூட்டியே வழங்க வேண்டும், சத்துணவு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பணியில் இருந்து உயிரிழந்த ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்ணொருவர், “சமையல் எரிவாயு, காய்கறி என எல்லாமே வீட்டு உபயோகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு அளவுகோலிதான் சத்துணவு பணிக்கும் நிர்ணயிக்க்கப்படுகிறது. இதில் எங்களுக்கு மானியமும் வருவதில்லை. அப்படியிருக்க எங்களால் எப்படி பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியும்? ரூ.2000-த்தை வைத்து, சமையலரோ, உதவியாளரோ இல்லை யாராவது வாழ்ந்துவிட முடியுமா? மாதம் ரூ/ 2,000 என்றால், ஒரு நாளுக்கு 66 ரூபாய் தான் வருகிறது. இதை வைத்து ஒரு அமைச்சர் குடும்பம் நடத்துவாரா? இல்லை, முதலமைச்சர் தான் நடத்துவாரா? அவர்களுக்கெல்லாம் தட்டில் நேரடியாக சாப்பாடு வந்துவிடுகிறது... அவர்களுக்கு தெரியாதது எதுமில்லை” என்று காட்டமாக பேசியிருந்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், “திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து குறைந்தபட்ச ஊதியமும், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.