ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீர் தட்டுப்பாடு! உற்பத்தியாளர்கள் வேதனை!

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மக்களின் நினைவில் நிற்பது பால்கோவா.
பால்கோவா
பால்கோவாகூகுள்
Published on

செய்தியாளர் - கருப்பஞானியார்

ஶ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பால்கோவா உற்பத்தி பாதிப்பை தவிர்க்க அடுத்த மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரிப்பதால், விரைவில் பால்கோவாவின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மக்களின் நினைவில் நிற்பது பால்கோவா. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மூலிகைகள் மற்றும் பசுமையான தாவரங்களை உண்ணும் மேய்ச்சல் மாடுகளில் இருந்து கிடைக்கும் புரதம் நிறைந்த கெட்டியான பாலில் தயார் செய்வதால் இங்கு தயாராகும் பால்கோவா, பால் அல்வா, கேரட் பால்கோவா மற்றும் இனிப்பு சேர்க்கப்படாத பால் பேடாவுக்கு தனி ருசி என கூறப்படுகிறது.

எனவே இங்கு தயார் செய்யப்படும் பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இங்கு செயல்படும் 200 க்கும் அதிகமான பால்கோவா உற்பத்தி நிலையங்களில் இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

பால்கோவா தயாரிப்பில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் பால்கோவாவை விற்பனை செய்வதற்காக பழைய பேருந்து நிலையம், தேரடி சாலைகள், மதுரை சாலை, பஜார் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட பால்கோவா விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

தோராயமாக சிறிய அளவிலான பால்கோவா உற்பத்தி நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 100 லிட்டர் பாலும், பெரிய அளவிலான உற்பத்தி நிலையத்திற்கு, சுமார் 2 ஆயிரம் லிட்டர் பாலும் தேவைப்படும். இதன் படி நாளொன்றுக்கு பால்கோவா உற்பத்திக்கு மட்டும் சுமார் 30 முதல் 50 ஆயிரம் லிட்டர் வரை பால் தேவைப்படும். திருவிழாக் காலங்கள், விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து பாலின் தேவை இன்னும் அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பால்கோவா
சரிவுக்குப்பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரன் ரூ.640 உயர்வு - பின்னணி என்ன?

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இங்குள்ள தேனீர் கடைகளுக்கும், பால்கோவா உற்பத்திக்கும் தேவையான பால் மதுரை சாலையில் செயல்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் ஆவின் பால் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உள்ளூர் தேவைக்கு ஏற்ற அளவுக்கு பால் ஆவின் வழங்குவதில்லை என பால்கோவா உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சில சமயங்களில் தேனீர் கடைகளுக்கு தேவையான பாலில் பாதி அளவு மட்டுமே கிடைப்பதாலும், அந்த பாலை பெறுவதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து பல முறை ஆவின் நிறுவனத்தின் மேலதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியும் அவர்கள் பால் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே பால்கோவா உற்பத்தியை பாதிப்பில் இருந்து பாதுகாக்க தற்போது அண்டை மாவட்டங்களான தேனி, தென்காசி மாவட்டத்தின் கரிவலம் வந்த நல்லூர், தென்மலை, சங்கரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பால் வாங்கி பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூரில் லிட்டர் ரூ. 42 க்கு கிடைத்து வந்த நிலையில், வெளி மாவட்டத்தில் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 45க்கு வாங்கி பால்கோவா மற்றும் துணை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரிப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மூலப்பொருளான பாலின் விலையை காரணம் காட்டி பால்கோவாவின் விலையை உயர்த்தினால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற காரணத்தால் இது வரை விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால், இன்னும் ஒரு மாதத்தில் பால்கோவாவின் விலை 10 விழுக்காடு வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு புறம் இருக்க பால் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர்களின் தேவையும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. பண்டிகை காலத்தில் ஆள் தட்டுப்பாடு காரணமாக இருவர் ஒரே நேரத்தில் இரண்டு அடுப்புகள் மூலம் பால்கோவா உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது பால் தட்டுப்பாடு காரணமாக வாரம் முழுவதும் வேலையின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

வாரத்தில் 6 நாட்கள் வரை பணியாற்றி வந்த தங்களுக்கு தற்போது, 4 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். 10 வருடங்களுக்கும் மேலாக இதே தொழிலில் ஈடுபட்டு வருவதால், வேறு வேலை தெரியாமல் விடுமுறை நாட்களில் வருமானமின்றி தவித்து வருவதாகவும், கேஸ் சிலிண்டர், அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதும், உலகம் முழுவதும் பிரபலமாகவும் உள்ள பால்கோவா தயாரிப்பு தொழில் நசிந்து விடாமல் பாதுகாக்க பால் உற்பத்தியை அதிகரிப்பது ஒன்றே தீர்வு எனக் கூறும் உற்பத்தியாளர்கள், அதற்கு ஆவின் நிறுவனம் மூலம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், பால்கோவா தயாரிக்கும் தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவன பொது மேலாளர் காமராஜிடம் கேட்ட போது, பொதுவாக தமிழகம் முழுவதும் கால நிலை மாற்றம், கடுமையான வெயிலின் காரணமாக கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைந்து விட்டது.

தற்போது ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு 33 ஆயிரம் லிட்டர் பால் வாங்கப்படுகிறது. இதில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் பால் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் மூலம் பொது மக்களுக்கு சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.

மீதமுள்ள சுமார் 13 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதில் விற்பனையானது போக மீதமுள்ள பாலின் மூலம், மோர், தயிர், ஐஸ்கிரீம், லஸ்ஸி உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கறவை மாடுகளின் உற்பத்தி திறன் குறைந்ததால் பால்கோவா உற்பத்தியாளர்கள் கேட்கும் அளவு பால் தினசரி வழங்க முடியவில்லை. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com