மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை

மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை
மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம்  - வேதாரண்யம் மக்கள் வேதனை
Published on

மின்விநியோகம் இல்லாத நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்ய‌ மின்சார வாரியம் முயற்சிப்பதாக வேதாரண்யம் பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. இந்த புயலில் 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்னமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கஜா புயலால் மின்கம்பங்கள் அனைத்தும் தரையோடு சாய்ந்தன. பல மின்கம்பங்கள் பாதியாக ஒடிந்து தொங்கின. இதனால் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை. மின் ஊழியர்கள் அயராது வேலை செய்தாலும் அதிகப்படியான சேதாரத்தால் மின் விநியோகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பல கிராமங்களுக்கு மின் விநியோகம் கிடைத்துவிட்டாலும் இன்னமும் மின்சாரம் கிடைக்காத கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க மின்வாரியம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருளில் மூழ்கி கிடந்தாலும் அரசின் நிலையை உணர்ந்து பொதுமக்களும் மின் ஊழியர்களுக்கு உதவிகரமாக இருந்தனர். 

இந்நிலையில் மின்விநியோகம் இல்லாத நாட்களுக்கும் சேர்த்து மின்சார வாரியம் கட்டண வசூல் செய்ய‌ முயற்சிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், ''கஜா புயலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களாகியும் மின்சாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

ஏற்கெனவே கஜா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை செலுத்திய மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று செல்போன் மற்றும் இணையதள கணக்குக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது மேலும் எங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மின்சாரமே இல்லாத நிலையில் எப்படி மின்கட்டணம் செலுத்த முடியும்? எங்களின் நிலை கருதி மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கிறார்கள்

இந்நிலையில் மின் கட்டண வசூல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தது குறித்து அமைச்சர் தங்கமணியிடம், புதிய தலைமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com