கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
ரயில் மறியல்
ரயில் மறியல்pt desk
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை தருவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி உரிய தண்ணீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்தும் 100 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக சீர்காழி ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ரயிலை மறித்து ரயில் பாதையில் அமர்ந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

ரயில் மறியல்
ரயில் மறியல்pt desk
ரயில் மறியல்
சிவகங்கை | பலகட்ட முயற்சியால் சாத்தியமானது 11-ம் வகுப்பு நாகலாந்து மாணவியின் தமிழ்வழிக் கல்வி கனவு!

அப்போது, போலீசாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

இதேபோல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மதிமுக சார்பில் பூமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், தளி ராமச்சந்திரன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலியும் பங்கேற்றனர்.

விசிக சார்பில் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் கரு.நாகராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அவர் வாசித்தார்.

சட்டப் போராட்டம் நடத்தி காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கருத்துகளை காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com