தீபாவளிக்கு தயாராகும் சுவையான செட்டிநாட்டு பலகாரங்கள் என்னென்ன? எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பதைப் பார்க்கலாம்.
காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களின் சிறப்பே, ஒருமுறை பயன்படுத்தும் எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தாமல் தரமான கலவைகளோடு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகை பலகாரங்கள் நாவிற்கு சுவையாகவும், சுவைக்க, சுவைக்க திகட்டாமலும் இருப்பதுதான்.
கை முறுக்கு, அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, அச்சு முறுக்கு, தேன்குழல், அதிரசம், சீப்புச்சீடை, இனிப்புச் சீடை, கார சீடை, மா உருண்டை, தட்டை என நீண்டு கொண்டே போகும் பட்டியலில் அசந்து போவார்கள் பலகாரப் பிரியர்கள்.
நண்பர்களுக்கு விருந்தளிப்பது, புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பது போன்று, செட்டிநாட்டு பலகாரங்களையும் கொடுத்து மகிழ்வது இன்றும் தொன்று தொட்டு இருந்து வரும்
வழக்கங்களில் ஒன்றாகும்.
சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாக பெருமை கூறும் செட்டிநாட்டு பலகார தயாரிப்பாளர்கள், இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் திருப்தியும் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.